திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் சோபனபுரத்தை சேர்ந்தவர் குமரேசன் மனைவி மகாலட்சுமி. இவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தார். அது தொடர்பாக 30.8.2007 அன்று, சோபனபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் நர்சாக பணியாற்றிய என். லோகாம்பாள் (57) என்பவரை சந்தித்து விவரம் கேட்டார்.
அந்த விண்ணப்பத்தை பெற்று பரிந்துரைப்பதற்காக லோகாம்பாள், ரூ. 500 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மகாலட்சுமி, இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசாரின் ஆலோசனை மற்றும் ஏற்பாட்டின் பேரில், மகாலட்சுமி மறுநாள் (31.8.2007), ஆரம்ப சுகாதாரம மையத்துக்குச் சென்று நர்ஸ் லோகாம்பாளிடம் ரு. 500 லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார். லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்ட நர்ஸ் லோகாம்பாள், மகப்பேறு உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை பரிந்துரைப்பதாக தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள் சுகுமாறன், பிரசன்னவெங்கடேஷ், சேவியர் ராணி, மற்றும் போலீசார் லோகாம்பாளை லஞ்சப் பணத்துடன் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் லோகாம்பாளுக்கு இருவேறு சட்டப்பிரிவுகளின் ஓராண்டு மற்றும் ஈராண்டு சிறை தண்டனையும் அவற்றை ஏக காலத்தில் (இரு ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும் எனவும்,ரூ.2 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி எம். பாக்கியம் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக எஸ். கோபிகண்ணன் ஆஜரானார்.