இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. வரும் ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் போட்டி தொடங்கப்படும் என தெரிகிறது. இந்த போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஐபிஎல் ஏலம் இன்று துபாயில் நடைபெற்று வருகிறது.ஐபிஎல் வரலாற்றில் இன்று ஒரு பெண் ஏலம் நடத்தினார். அவரது பெயர் மல்லிகா சாகர். இதற்கு முன் இவர் பெண்கள் ஐபிஎல் போட்டியிலும் ஏலம் நடத்தி உள்ளார்.
ஏலம் தொடங்கிய உடன் முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் பவுலை 7 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் ரூ. 6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி அவரை தட்டி தூக்கியது.உலகக்கோப்பை தொடரில் அசத்திய இளம் வீரரான நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை ரூ. 1.80 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.
ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ், ரூ.20.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இந்த தொகை ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை. இதற்கு முன் இங்கிலாந்து வீரர் சாம் கரண் ரூ.18.5 கோடிக்கு எலம் எடுக்கப்பட்டார். அதுவே இதுவரை உச்சபட்ச தொகையாக இருந்தது. அது இப்போது முறியடிக்கப்பட்டு உள்ளது.