ஐபிஎல் 43வது லீக் ஆட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சென்னை ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட் செய்த ஐதராபாத் 18.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நேற்றுடன் சென்னை 9 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இனி உள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இல்லை என்ற அளவில் உள்ளது.
அணியின் இந்த மோசமான நிலை குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியதாவது:
“இதுவரை நாங்கள் வெளிப்படுத்திய செயல்பாடுகளை வைத்து ஏலத்தில் சரியாக செயல்பட்டோம் என்று சொல்வது கடினமாகும். நாங்கள் எங்களுடைய விளையாடும் ஸ்டைல் பற்றி விரிவாகப் பார்த்து வருகிறோம். இந்த விளையாட்டு எப்படி உருமாறுகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அது எளிதல்ல. கடினமான ஐ.பி.எல். தொடரில் எங்களுடைய பழைய சாதனைகளை நினைத்து பார்க்கிறோம்.
நீண்ட காலமாக தொடர்ச்சியாக அசத்தி வந்த எங்களுக்கு இங்கிருந்து வேறு வழியில் செல்ல அதிக நேரம் எடுக்காது. மற்ற அணிகள் ஏலத்தில் சிறந்து விளங்கியதால் தற்போது அசத்துகின்றன. ஆனால் எங்களால் அதை சரியாக செய்ய முடியவில்லை. ருதுராஜ் போன்ற முக்கிய வீரர் காயமடைந்தபோது டாப் ஆர்டரில் இருப்பவர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும். ஏலம் என்பது கச்சிதமான அறிவியல் கிடையாது. அது நிலையற்ற மிருகம். எனவே நீங்கள் அதன் முடிவில் மன ரீதியாகவும் சில நேரங்களில் உடல் ரீதியாகவும் சோர்வடைந்து விடுவீாகள்.
உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் இப்போதும் எங்களிடம் நல்ல அணி இருக்கிறது. அதனால் நாங்கள் வெற்றிப்பாதைக்கு திரும்பும் தூரம் தொலைவில் இல்லை. சில காயம், சுமாரான பார்ம் , திட்டங்களைச் செயல்படுத்தாதது, நிறைய மாற்றங்கள் செய்தது போன்றவற்றால் சரிந்துள்ளோம். ஆம் ……எங்கள் அணியில் நிறைய பொறுப்பு மற்றும் ஆன்மா தேடலும் இருக்கிறது. அது 100 சதவீதம் என்னிடம் இருந்து தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.