சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி சென்னை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 4-வது அகாடமியாக திருச்சியில் உள்ள கமலா நிகேதன் மாண்டிசோரி பள்ளியில் தொடங்கப்படுகிறது. இங்கு 8 ஆடுகளங்களுடன் மின்னொளி வசதியும் அமைக்கப்படு கிறது. இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்கிசின் முதன்மை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில்,
‘தமிழ்நாட்டின் மையமான திருச்சியில் கிரிக்கெட்டுக்கான ஆர்வம் அதிகம். இந்த அகாடமியின் மூலம் பல்வேறு இளம் வீரர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியும், அனைத்து விதமான வசதிகளும் வழங்கி அவர்களின் விளையாட்டுத்திறன் மேம்படுத்தப்படும். இதன் மூலம் வருங்காலத்தில் சிறந்த வீரர்கள் உருவாகுவார்கள் என்றார். இந்த சூப்பர் கிங்ஸ் அகாடமி ஏப்ரல் முதல் செயல்பட தொடங்கும் என்றும், இரு பாலருக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.