இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இன்னும் ஒரு அணிதான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டியுள்ளது.
இந்த ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது. இன்று இங்கிலாந்து- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் நெதர்லாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தும் விடும்.
ஒருவேளை நெதர்லாந்து வெற்றி பெற்றால், கடைசி ஆட்டத்தில் அது இந்தியாவையும் வீழ்த்த வேண்டும். அந்த வெற்றிகள் மட்டும் போதாது. அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், இந்தியாவையும் வீழ்த்த வேண்டும். இது சாத்தியமற்றது.
நியூசிலாந்து நாளை இலங்கையை எதிர்கொள்கிறது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளும் தங்களது கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை தோல்வியடைந்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளும் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்து, நெதர்லாந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அதன்பின் ரன்ரேட் அடிப்படையில் நான்கு அணிகளில் ஒன்று அரையிறுதிக்கு முன்னேறும்.
இதே நிலைதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும். இதனால் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை பெற முனைப்பு காட்டும். இதனால் வரவிருக்கும் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.