பொள்ளாச்சி தப்பட்டை கிழவன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சபாநாயகம் (32). தேங்காய் வியாபாரம் மற்றும் கார் டீலராக இருந்துள்ளார். இவர், கடந்த 14ம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். இவர் அறைக்கு சென்ற பின்னர் வெளியே வரவில்லை. புகாரின்படி ரத்தினபுரி போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது பூச்சி மருந்து குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், சபாநாயகம், திருமணம் செய்யாமல் பெற்றோருடன் வசித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் தொழிலில் முதலீடும் செய்துள்ளார். இதற்காக சிலரிடம் கடன் வாங்கி உள்ளார். பணம் கொடுத்தவர்கள், விரைவாக பணம் தரும்படி கேட்டுள்ளனர். லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் கோவை வந்து லாட்ஜில் அறை எடுத்து தங்கி தற்கொலை செய்துள்ளார் என்றனர். சபாநாயகம் எழுதி வைத்திருந்த கடிதத்தில் எனது 2 கார்களை பணம் தந்தவர்கள் பறித்து கொண்டனர். நான் 90 லட்சம் ரூபாயை கிரிக்கெட் பெட்டிங்கில் இழந்து விட்டேன்.அதனால் நான் தற்கொலை செய்ய போகிறேன்’’ என எழுதியிருந்தார்.