ஒடிசாவின் கட்டாக் நகரில் மகிஷிலாண்டா கிராமத்தில் சவுத்வார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், உள்ளூரை சேர்ந்த இரு அணிகளுக்கு இடையே நேற்று (ஞாயிற்று கிழமை) கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டி நடுவராக, மகிஷிலாண்டா கிராம பகுதியை சேர்ந்த லக்கி ராவத் (வயது 22) என்பவர் செயல்பட்டு உள்ளார். பெர்ஹாம்பூர் என்ற அணி முதலில் பேட்டிங் செய்து உள்ளது. இதில், முதல் பந்தில் வீரர் ஒருவருக்கு அவுட் வழங்கப்பட்டு உள்ளது. பொதுவாக, நடுவர் வழங்கும் தீர்ப்பை வீரர்கள் ஏற்று கொள்வது வழக்கம். ஆனால் இந்த போட்டியின்போது, நடுவர் தவறான முடிவை வழங்கி விட்டார் என கூறி மோதல் தொடங்கியது. நடுவரின் முடிவால், இரு அணியினரும் தகராறில் ஈடுபட்டனர்.
இந்த மோதல் முற்றியதில், பெர்ஹாம்பூர் அணியின் விளையாட்டு வீரரான ஜக்கா, பேட்டால் லக்கியை தாக்கினார். இந்த போட்டியை பார்வையாளர்கள் வரிசையில் இருந்து பார்த்து கொண்டிருந்த ஸ்முருதி ரஞ்சன் ராவத் என்ற மோனு என்பவர் ஆத்திரத்தில் கிரிக்கெட் ஆடுகளத்திற்குள் புகுந்து லக்கியை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த நடுவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில், தொடர்புடைய ஜக்கா என்பவரை கிராமவாசிகள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்றொரு நபரான ரஞ்சன் ராவத் என்பவரைபோலீசார் தேடி வருகிறார்கள்.அவுட்