அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி பட்டாசுகள், தீப்பெட்டிகள் மற்றும் அவற்றின் சேமிப்பு கிடங்குகள், அதிக எரியக்கூடிய திரவ மற்றும் எரிவாயு நிறுவல்கள் மற்றும் அவற்றின் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றுவதை தொடர்ந்து கண்காணித்திடும் வகையில் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையாக கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரை உறுப்பினராக
கொண்டும், இணை இயக்குநர் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் அவர்களை செயலாளராக கொண்டும், இக்குழுவில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர், வெடிமருந்து தடுப்பு துணை கட்டுபாட்டு அலுவலர், இணை இயக்குநர் சுகாதாரத் துறை, வெடிபொருட்கள் உற்பத்தியாளர்களின் பிரதிநிதி, சிறு, குறு, நடுத்தர தொழில்புரிவோர்களின் பிரதிநிதி ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்டு இக்குழு செயல்பட உள்ளது.
மேலும், மாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும், மேலும் இக்குழுவின் கீழ் செயல்படும் விதமாக வட்ட அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளுர் திருவிழாக்கள், தீபாவளி போன்ற பெருவிழாக்களில் ஏற்படும் விபத்துகளை தடுத்திடும் பொருட்டு சிறப்பு குழுக்கள் மூலமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வதை, மேற்கண்ட மாவட்ட அளவிலான தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு குழு கண்காணித்திட ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து, வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்த அரியலூர் மாவட்டம், விரகாலூர் கிராமத்தை சேர்ந்த திருமதி.ராசாத்தி, அரியலூர் மாவட்டம், அரண்மனைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த திரு.முருகானந்தம் ஆகிய இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை) அம்பிகா, அரசு அலுவலர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள், நிரந்தர விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.