கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக சாடினார். நாட்டில் பல தீவிர அரசியல் முன்னேற்ற விசயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி இந்தியாவில் இருப்பது இல்லை. அவர் ஒரு தீவிர அரசியல்வாதி இல்லை. இதுவே நாட்டிலுள்ள மக்களின் அனுபவம். மேலும் கேரளாவுக்கு வந்த ராகுல் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து இருப்பது அவர் பக்குவமற்றவர் என காட்டுகிறது என பினராயி விஜயன் விமர்சனம் செய்தார். இதற்கு முன் கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசும்போது, பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளபோது, அவரை மத்திய விசாரணை அமைப்புகள் ஏன் விட்டு வைத்திருக்கிறது? என கேட்டார். வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை எல்லாம் அவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றனர் என்றும் பேசினார். இதேபோன்று, இடதுசாரி ஜனநாயக முன்னணியின் எம்.எல்.ஏ. பி.வி. அன்வர் கூறும்போது, உண்மையில் நேரு-காந்தி குடும்பத்தில் பிறந்தவரா? என ராகுல் காந்திக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்..