மத்திய அரசை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சுகந்தி, திருச்சி மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மறியல் போராட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்த 9
வருடமாக மத்திய அரசு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு வழங்கவில்லை என கூறி இளைஞர் ஒருவர் பிணம் போல வேடமிட்டு படுத்திருந்தார். அவரது உடல் மீது பக்கோடா வைக்கப்பட்டு இருந்தது.
திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று தலைமை தபால் நிலையம் சிக்னலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 500க்கு மேற்பட்டவர்கள் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.