சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, ‘காரல் மார்க்சின் சிந்தனைகள் இந்தியாவை சிதைத்தது’ என்று தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவர்னரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, சென்னை சைதாப்பேட்டையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்திய கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போது கே.பாலகிருஷ்ணன்.. கவர்னர் ஆர்.என்.ரவிக்கு ‘இளையோருக்கு மார்க்ஸ் கதை’ என்ற புத்தகத்தை அனுப்பி வைக்கிறோம். இதை படித்த பிறகாவது கவர்னர் மார்க்ஸை பற்றியும், மார்க்ஸ் சிந்தனைகளைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்.என்.ரவி, கவர்னராக இருக்க வேண்டுமே தவிர, அரசியல்வாதியாக இருக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். மார்க்ஸை பற்றி விமர்சிக்கும் தகுதி ஆர்.என்.ரவிக்கு இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். தமிழகத்தின் எந்த மூலைக்கு ஆர்.என்.ரவி போனாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள், தோழர்கள், மார்க்சிய சிந்தனையாளர்கள், இடதுசாரிகள் அவருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள் என்றார் கே.பாலகிருஷ்ணன்.