தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 25 பழைய பேருந்து நிலையம் பகுதியில் நேற்றுமுன்தினம் மாநகர் நல அலுவலர் டாக்டர் வீ.சி. சுபாஷ் காந்தி தலைமையில் பொது மக்களுக்கும் வாகனம் ஓட்டிகளுக்கும் இடையூறாக சுற்றுத் திரிந்த 3 மாடுகள் 3 கன்றுகள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காப்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அபராத தொகை விதிக்கப்பட்டது.
மாடுகளின் உரிமை தாரர்களுக்கு அபராத தொகையாக முதல் முறை பிடிக்கப்படும் மாடு ஒன்றுக்கு அபராதம் ரூ.10000 தொகையும் மற்றும் கன்று ஒன்றுக்கு ரூ.3000 தொகையும் வசூலிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே மாடு பிடிக்கப்படும் நிலையில் அதன் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ. 15000 தொகையும், கன்று ஒன்றுக்கு ரூ 5000 தொகையும் வசூலிக்கப்படும். மூன்றாவது முறை அதே மாடு பிடிக்கப்பட்டால் அதன் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.20000 மற்றும் கன்று ஒன்றுக்கு ரூ.10000 தொகையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு நாளைக்கும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். நான்காவது முறை பிடிக்கப்பட்டால் கோசாலைக்கு அனுப்பப்படும் என்று பொதுமக்களுக்கு தஞ்சாவூர் மாநகராட்சியால் 21.01.2024 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இம்மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை காப்பகத்திற்கு நான்கு பிரத்யேக வாகனம் மூலம் கொண்டு சென்று பாதுகாக்கவும் மற்றும் உரிமையாளர்களுக்கு அபராத தொகை விதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கால்நடைகளுக்கு தேவையான தீவனம் தண்ணீர் உள்ளிட்டவை கால்நடை காப்பகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கால்நடை காப்பகத்தில் பிடித்து பாதுகாக்கும் கால்நடைகளுக்கு ஏதேனும் உடல்நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக சுகாதார ஆய்வாளர் கால்நடை மருத்துவர் அணுகி கால்நடைக்கு உரிய சிகிச்சை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதன்படி நேற்று இந்த மாடுகள் பிடிக்கப்படும் போது, துப்புரவு அலுவலர்கள் தங்கவேல், ரமேஷ், சீனிவாசன், ராமச்சந்திரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் பொன்னர், ஸ்டீபன், எபின் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.