ஈரோடு கிழக்க இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 31ம் தேதி துவங்குகிறது. இதன் காரணமாக ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் அதிமுக.,விற்கு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி தரப்பில் வேட்பாளரை அறிவித்த அடுத்த நிமிடம் தனது வேட்பாளரை அறிவிக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். இதனால் இரட்டை இலை முடக்க வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அரிமா சுந்தரம், பாலாஜி சீனிவாசன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் நேற்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் ஒரு கோரிக்கை வைத்தனர். அதில், ‘‘அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் உங்களது அமர்வில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கபட்டுள்ளது. இதில் எங்கள் தரப்பு சார்பாக வேட்பாளரை தனியாக நிறுத்த விரும்புகிறோம். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற எனது கையெழுத்தை வேட்பாளர் படிவத்தில் போடுவதற்கு மற்றும் கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து வருகிறது. எனவே இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சில அறிவுறுத்தல் மற்றும் பரிந்துரையுடன் கூடிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்கவும், இரட்டை இலை சின்னத்தை எங்களது தரப்புக்கு ஒதுக்கீடு செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும் எங்களது இந்த கோரிக்கை மனுவாகவும் தயார் நிலையில் உள்ளது. நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் அதனை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்’ என தெரிவித்தனர். இதையடுத்து அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள்,‘‘ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் எப்போது, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ன, உங்களது இந்த முறையீடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டு விட்டதா’’ உள்ளிட்ட விவரங்களை கேட்டார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், ‘‘ வேட்பு மனு தாக்களுக்கு பிப்ரவரி 7ம் தேதி தான் கடைசி தினம் என்றும், இந்த முறையீடு குறித்து எதிர் தரப்பினரிடம் பகிர்ந்து கொண்டது மட்டுமில்லாமல் அதன் நகலும் அவர்களிடம் வழங்கப்பட்டு விட்டது’’ என தெரிவித்தார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘அப்படி என்றால் வரும் திங்கட்கிழமை முறையிடுவதற்கான விண்ணப்பங்களை சரியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அன்றைய தினம் மீண்டும் உங்களது தரப்பில் முறையிடுங்கள். இருப்பினும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்குவது குறித்து நாங்கள் பரிசீலனை செய்கிறோம் என தெரிவித்தனர். இதில் நீதிபதிகள் வழங்கிய இந்த உத்தரவைத் தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கை குறித்த புதிய மனு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்றைய தினமே உடனடியாக தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுக்குழு வழக்கு, இரட்டை இலை சின்னம் யாருக்கு ஆகியவை தொடர்பான விவகாரத்தில் வரும் 30ம் தேதி அல்லது 31ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.