Skip to content
Home » அவதூறு போஸ்டர்- ரயில்வே தொழிற்சங்க தலைவருக்கு அபராதம்

அவதூறு போஸ்டர்- ரயில்வே தொழிற்சங்க தலைவருக்கு அபராதம்

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் 2017ம் ஆண்டு வைத்தீஸ்வரன் கோவில் ரயில்வே நிலையத்தில் ரயில் நிலைய மேலாளராக பணியாற்றியபோது ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான மரங்களை வெட்டி விற்பனை செய்ததாக தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட்ட தலைவர் மணிவண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர் ஒட்டினர்.

தன்மீது முன்விரோதம் காரணமாக அவதூறாக போஸ்டர்  ஒட்டியதாக  சீனிவாசன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனது சார்பில் சீனிவாசனே வழக்கில் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிலையில் சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிந்த நிலையில் ரயில்வே ஸ்டேஷன் நிலைய மேலாளர் சீனிவாசன் மீது எவ்வித முகாந்திரம் இல்லாமல் அவதூறாக போஸ்டர் போட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

எனவே தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட்ட தலைவர் மணிவண்ணன் உள்ளிட்ட ஐந்து பேருக்குதலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும், அதில் ரூ. 20 ஆயிரம் ரயில்வே நிலைய மேலாளராக இருந்த சீனிவாசனுக்கும் ரூ. 5 ஆயிரம் அரசு கணக்கிலும் செலுத்த வேண்டும் எனவும் உரிய தொகை செலுத்த தவறினால் ஒரு வாரம் சாதாரண சிறை தண்டனை  என என தீர்ப்பு வழங்கப்பட்டது.