கரூரை அடுத்த ராயனூர் தில்லைநகரை சேர்ந்தவர் ரெங்கநாதன் (37), ஏசி மெக்கானிக். இவரது மனைவி தீபிகா (29). இவர்களது மகள் அக்சயா (4). ரெங்கநாதன் குடும்பத்துடன் மணவாடி அய்யம்பாளையத்தில் வசித்து வந்தார்.
ரெங்கநாதனின் சித்தி மகன்களான பார்த்திபன் (26), கவுதம் (19), பிரவீண் (25). ஆகியோருக்கும், ரங்கநாதனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
அய்யம்பாளையத்தில் உள்ள ரெங்கநாதன் வீட்டுக்கு கடந்த 2020ம் ஆண்டு மே 11ம் தேதி இரவு பார்த்திபன், கவுதம், பிரவீண் ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர். ரெங்கநாதனை பார்த்திபன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரெங்கநாதன் தலை மீது கவுதம் காஸ் சிலிண்டரை தூக்கி போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த தீபிகாவை பிரவீண் அரிவாளால் வெட்டியதில் அவரும் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீஸார் வழக்கு பதிவு செய்து பார்த்திபன், கவுதம், பிரவீண் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த பிரவீண் தலைமறைவானார். கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில் கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் வழங்கிய தீர்ப்பில், பார்த்திபன், கவுதம் ஆகிய இருவருக்கு தலா இரு இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும், தலா ரூ.31,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.