குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள விஞ்சியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹேமுபாய் மக்வானா (38) மற்றும் ஹன்சா பென்(35). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு மாந்திரீக பூஜைகளில் நம்பிக்கை இருந்த நிலையில், இவரும் கடந்த ஓராண்டு காலமாக தங்கள் குடிசையில் நாள்தோறும் மாந்திரீக பூஜைகளை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அன்று ஹோம குண்டத்தில் நெருப்பு வளர்த்து பூஜை செய்த இந்த தம்பதி, மறுநாள் காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை ஆய்வு செய்த போது தான் பகீர் உண்மைகள் வெளியாகியுள்ளது. இவர்கள் தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுக்கும் விதமாக எந்திரம் ஒன்றை உருவாக்கி வீட்டருகே வைத்துள்ளனர்.சம்பவ நாள் அன்று ஹோமம் வளர்த்து அந்த எந்திரத்தில் தலையை கொடுத்து தாங்களே அதை இயக்கி தலை துண்டாக்கிக் கொண்டு நரபலியாகியுள்ளனர்.
தலை உருண்டு சென்று குண்டத்தில் விழும் விதமாக இவர்கள் அதை அமைத்துள்ளனர். இரண்டு தலைகளையும் ஒன்றாக வெட்டிவிட்டு ஹோமகுண்டத்தில் விழும்படி கணவன்-மனைவி தாங்களாகவே ஸ்டாண்ட் தயார் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம். இதில் கயிற்றுடன் கூடிய கனமான இரும்பு மேடையின் கீழ் கூர்மையான ஆயுதம் பொருத்தப்பட்டிருந்தது இது கமல பூஜை என அழைக்கப்படுகிறது. மேலும் இவர்கள் உயிரிழந்த இடத்தில் இருந்து தற்கொலை கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், தங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோரை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என உறவினர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தம்பதி தங்களை தாங்களே நரபலி கொடுத்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாமரை பூஜை செய்ய என்ன காரணம் என்பதுதான் கேள்வி? இந்த சடங்குகள் செய்ய யாரேனும் அவர்களை தூண்டினார்களா? எந்த நோக்கத்திற்காக இந்த பூஜை செய்யப்பட்டது? என விசாரணை நடைபெறுகிறது.