சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளிடக்கியதாகும். இங்கு பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் அதனுள் வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரம் (VVPAT) வைக்கப்படும் அறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான காப்பறைகள், தபால் வாக்குகள் வைக்கப்படும் காப்பறைகள், தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவலர் அறை, ஊடக மையம் உள்ளிட்டவை குறித்தும், ஒவ்வொரு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கும் வேட்பாளர்களின் முகவர்கள் சென்றுவரும் பிரத்யேக வழிகள் குறித்தும் மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலரமான ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு நடத்தினார்.
காவல்துறையின் சார்பில் அமைக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் மேலும், வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டுவந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரும் வாகனங்கள் முறையாக உள்ளே வந்து வெளியேறுவதற்கு ஏதுவான வழிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் உதவி தேர்தல் அதி்காரிகள் உள்ளிட்டவர்களிடம் கலெக்டர் விசாரித்தார்.
இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) திருவருள், உதவி செயற்பொறியாளர்கள் தனவேல், ஜெயந்தி, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் கலிலூர்ரகுமான் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.