தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளுக்கு துக்கம் தெரிவிக்கும் விதமாக, அ.தி.மு.க., உறுப்பினர்கள் இன்று 2ம் நாளாக இன்றும் கருப்பு சட்டையில் வந்தனர். சபை துவங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி எழுந்து பேசினார். சபாநாயகர் அனுமதி தரவில்லை. சபாநாயகரை கண்டித்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்ததாவது.. நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது. பேச வேண்டிய நேரத்தில் அனுமதி தருகிறேன். கேள்வி நேரம் மக்களுக்கான நேரம். எதிர்க்கட்சிகளுக்கு பேச முறைப்படி அனுமதி உண்டு. எதிர்க்கட்சியினருக்கு எந்த நோக்கம் இருக்கு என்று தெரியவில்லை.
மீண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இதுபோல் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வி நேரத்திற்கு முன்பாக, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பது சரியல்ல. வருங்காலத்தில் எதிர்க்கட்சியினர் நாகரீகமாக செயல்பட வேண்டும். உங்கள் நெருக்கடியை தீர்க்கும் இடம் சட்டசபை இல்லை என்றார். வெளிநடப்பு செய்த பின்னர் சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி … மக்களுடைய உயிர் பிரச்னை என்ற வகையில் சட்டசபையில் பேச அனுமதி கோரினோம். ஆனால் சபாநாயகர் பேச அனுமதி தர மறுத்துவிட்டார். கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு நடைபெறவில்லை என மாவட்ட கலெக்டர் முதலில் கூறினார். கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனைக்கு தாமதமாக வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் போலீசாருக்கு தெரிந்தே, கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருகிறது. மக்கள் உயிரைப் பறித்த சண்டாளர்களை தண்டிக்க நீதிபதி நல்ல தீர்ப்பை வழங்குவார். இது குறித்து, சி.பி.ஐ., விசாரணை அவசியம். தமிழக அரசின் கீழ் உள்ள சி.பி.சி.ஐ.டி., விசாரித்தால் உண்மை வெளி வராது.
கள்ளச்சாரயத்தால் நாள்தோறும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை விட வேற என்ன முக்கிய பிரச்னை இருக்கிறது. அரசு துரிதமாக செயல்பட்டு இருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்றார்.