காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி வெற்றிபெற்று பதவியேற்றார். இங்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக, தமாகா என 51 கவ்உன்சிலர்கள் உள்ளனர். மகாலட்சுமி மேயராக பதவியேற்றதில் இருந்தே பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார். தங்கள் வார்டுகளில் சரிவர பணிகள் நடைபெறவில்லை அனைத்து கவுன்சிலர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர். அதிலும் கடந்த சில மாதங்களாக கவுன்சிலர்களுக்கும் அவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வந்தது. திமுக கவுன்சிலர்களே மகாலட்சுமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.
திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக என அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் ஒரு சேர எதிர்ப்பு தெரிவிப்பதால் பல கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கணக்கு குழு, நிதிக் குழு உட்பட பல்வேறு நிலைக் குழு உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களை சமாதானப்படுத்த பலகட்டங்களாக முயன்றும் பலனளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, 33 கவுன்சிலர்கள் சேர்ந்து மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆணையர் செந்தில்முருகனிடம் மனு அளித்தனர். இதனையடுத்து மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஜூலை 29-ம் தேதி( அதாவது இன்று) விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் அன மாநகராட்சி ஆணையர் அறிவித்தார் . அதன்படி இன்று காலை 10 மணிக்கு முன்பாகவே ஆணையர் செந்தில்முருகன் மற்றும் அதிகாரிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்காக காஞ்சிபுரம் அண்ணா அரங்குக்கு வந்திருந்தனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து 41 கவுன்சிலர்கள் வாக்களித்தால் மட்டுமே தீர்மானம் வெற்றிபெறும் என்கிற நிலையில், திடீர் திருப்பமாக இன்றைய கூட்டத்துக்கு காலை 11.30 மணி ஆகியும் கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. 35-வது வார்டு திமுக உறுப்பினர் பிரவீன்குமார் மட்டுமே கூட்டத்திற்கு வருகை தந்தார். ஆனால் அவரும் வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல், மாநகராட்சி மேயரை பதவி நீக்கம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யக் கோரி ஆணையரிடம் மனு அளித்தார். அந்த மனுவை ஆணையர் வாங்கிக்கொள்ளாததால், அவர் அமர்ந்திருந்த மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். கூட்டத்துக்கு கவுன்சிலர்கள் யாரும் வராததால் மேயர் மகலாட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்துவிட்டதாக அறிவித்துவிட்டு ஆணையர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், எதிர்ப்பு கவுன்சிலர்கள் 22 பேர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தனி பஸ்சில் சுற்றுலாவுக்கு புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்று நடைபெறும் நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு கூட்டத்தில் கலந்து கொள்வது சந்தேகம்தான் என்கிற செய்திகளும் காலை வெளியாகியிருந்தன. மேயர் தரப்பு கவுன்சிலர்கள் 10 பேரும் சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.