பன்றித் தொல்லை தாங்க முடியவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை இ.பி.காலனி விரிவாக்கப்பகுதி கெஜலட்சுமி நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை இ. பி. காலனி விரிவாக்க பகுதியில் கெஜலட்சுமி நகர் உள்ளது. இந்த நகர் பகுதியில் பன்றிகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இவை சாக்கடை கழிவுநீரில் உருண்டு, புரண்டு எழுந்து குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக குடியிருப்பு பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிவதால் வாகன ஒட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.