திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 19,20 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட சந்துக்கடை, மாப்பிள்ளை நாயக்கர் குளத்தெரு, ராணித்தெரு, பாபுரோடு கள்ளத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆரம்பத்தில் வாந்தி, பேதி போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட சுமார் 20க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாகவும் அந்த பகுதியில் பரவலாக பேசப்படுகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் சிலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று குடிநீரை காய்ச்சி குடிக்கும்படி கூறி வருகின்றனர் . இதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து பார்வையிட்டு சென்றுள்ளார்.
இது தொடர்பாக இரு தினங்களுக்கு முன்பு மாநகராட்சி மேயர் அன்பழகன் இந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்யவும், குளோரின் அளவை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார். இந்த நிலையில் நேற்று சுண்ணாம்புக்கார தெரு பகுதியில் குடி நீருடன் கழிவு நீர் கலந்து வந்ததோடு மட்டும் அல்லாமல் குடிநீரில் ஏராளமான பழுக்கள் நெளிந்ததால் அச்சம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி
அதிகாரிகள் குடிநீர் செல்லக்கூடிய பகுதிகளை தோண்டி எந்த இடத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலக்கிறது என ஆய்வு மேற்கொண்டனர். மேலும் குடிநீரில் உள்ள குளோரின் அளவை பரிசோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த 19வது வார்டு கவுன்சிலர் சாதிக் பாட்சா வை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 20க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்துள்ளதாக பொதுமக்கள் கூறியதற்கு, ஆதாரமில்லாமல் குறை கூறக்கூடாது என கவுன்சிலர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சுகாதாரம் இல்லாமல் குடிநீரை அருந்தியதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில்.. வாந்தி வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட போது மருத்துவர்கள் தண்ணீர் மூலமாக தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறியதாகவும், குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்கவும் அறிவுறுத்தியதாக கூறினர்.
இந்நிலையில் மாநகராட்சி சார்பில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டுபிடிக்க காலதாமதம் ஆகி வரும் நிலையில் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதி பொதுமக்கள் உயிருக்கு பயந்து கேன்களில் விற்கப்படும் குடிநீரை வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி போன்று திருச்சியில் உயிர் பலி வாங்கும் குடிநீரால் ஏற்படும் உயிர்பலிக்கு மாநகராட்சி விரைந்து போர்கால அடிப்படையில் தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்