சீனாவில் கொரோனா தீவிரம் அதிகமாகி உள்ள நிலையில், அங்குள்ள ஷாங்காய் சுன்டெக் மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இந்தியாவை சேர்ந்த டாக்டர் சஞ்சீவ் சவுபே தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘ஷாங்காயில் சுகாதார உள்கட்டமைப்பு நன்றாக உள்ளது; ஆனால் சீனாவின் பிற பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளது. அதனால் பல்வேறு இடங்களிலிருந்து ஷாங்காய்க்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். தற்போது இங்கேயும் பீதியான சூழ்நிலை நிலவி உள்ளது. ஏராளமான டாக்டர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஒரு மாதத்திற்குப் பிறகு, சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டம் வருகிறது.
அதனால் பெரு நகரங்களில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். அதனாலும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. வரும் மார்ச் மாதத்திற்குப் பிறகுதான், சீனாவின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை சொல்ல முடியும். அனைவருக்கும் தடுப்பூசி போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று சீனா கூறியது. ஆனால், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடமுடியவில்ைல. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தால், கொரோனா பரவாது என்று நம்பினர். இருந்தாலும் கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கொரோனா உலகத்தை விட்டு இன்னும் செல்லவில்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவைற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும். கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டும்’ என்றார்.