சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவுக்கு பலர் இறந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த வித தகவல்களையும் சீனா தெரிவிக்கவில்லை. சீனாவில் கொரோனா உச்சம் அடைந்துள்ளதால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பிரான்ஸ், தென் கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் சீனா பயணிகளுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அவசியம் என அறிவித்து உள்ளன.
தங்கள் நாட்டில் கொரோனோ கட்டுப்பாட்டில் உள்ளது. பிற நாடுகள் சீனாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. ஆனால் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கவலை அளிப்பதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் சீனா மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது சீனாவில் தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலை, எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க என்னனென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து ஆலோசித்தனர். இந்த நிலையில் கொரோனா குறித்து வெளிப்படையான தகவல்களை பகிர வேண்டும் என்றும் சீனாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி கூடுதல் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு மீண்டும் சீனாவை வலியுறுத்தி உள்ளது.