Skip to content
Home » பிஎப் 7…..புதியவகை கொரோனா10 லட்சம் பேரை கொல்லுமா? அறிகுறிகள் என்ன?

பிஎப் 7…..புதியவகை கொரோனா10 லட்சம் பேரை கொல்லுமா? அறிகுறிகள் என்ன?

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது.

இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்வகை வைரஸ் பாதிப்பால், வழக்கமான தொற்றை போலவே காய்ச்சல், இருமல், சோர்வு ஆகியவை ஏற்படும். குறைவான எண்ணிக்கையில் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி கடுமையான உடல்நலக் குறைவை பிஎப் 7 தொற்று ஏற்படுத்தும். தடுப்பூசியால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி இந்த புதிய வகை கொரோனா தொற்று பரவும் ஆற்றல் கொண்டது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எளிதில் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்கள், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் முக கவசம் அணிய வேண்டும். இணை நோய் உள்ளவர்கள், மூத்த குடிமக்கள் இதை அவசியம் செய்யுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60 % மக்கள் வரை தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படும் நிலையில், அடுத்த சில மாதங்களில் சுமார் 10 லட்சம் இறப்புகள் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இந்த வகை கொரோனா இந்தியாவிலும் கண்டறியப்பட்ட நிலையில், விமான நிலையங்களில், சர்வதேச பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!