Skip to content
Home » தமிழக ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை

தமிழக ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை பீதியிலேயே வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்களை பாதித்த இந்த வைரஸ், லட்சக்கணக்கான மக்களின் உயிரையும் காவு வாங்கி விட்டது. இந்த எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனா வைரஸ் அடிக்கடி மாறுபாடு அடைந்து புதிய திரிபுகளாக உருவாகி மேலும் அச்சுறுத்தலை கூட்டி வருகிறது.

அந்த வகையில் பி.எப்.7 என்ற பெயரில் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் தாயகமான சீனாவில் இந்த வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். உயிரிழப்புகளும் அதிக அளவில் தினந்தோறும் நிகழ்ந்து வருகிறது. இறுதிச்சடங்கு செய்வதற்காக ஆஸ்பத்திரிகளின் வெளியே நீண்ட வரிசையில் சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உலகை உலுக்கி வருகின்றன.

இதைப்போல ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளும் இந்த புதிய கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கின்றன. இப்படி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த பி.எப்.7 ரக கொரோனா இந்தியாவிலும் ஏற்கனவே தலைகாட்டி விட்டது. குஜராத், ஒடிசாவில் இந்த தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைப்போல நாட்டில் நிகழும் தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் சராசரியாக 200 என்ற எண்ணிக்கையில் நீடிக்கிறது. நேற்று காலை நிலவரப்படி முந்தைய 24 மணி நேரத்தில் 196 பேர் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர்.

இதனால் இந்தியாவில் மீண்டும் ஒரு கொரோனா பேரிடர் நிகழாதவாறு தடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டு உள்ளது. இதில் முக்கியமாக, மேற்படி புதியவகை தொற்று கண்டறியப்பட்ட நாடுகள் உள்பட வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அறிவுறுத்தி உள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் இந்த பரிசோதனை வேகமடைந்து இருக்கிறது.

அத்துடன் மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசஅதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தொடர்ந்து ஆலேசானை கூட்டங்கள் நடத்தப்பட்டு புதியவகை கொரோனா குறித்து உஷார்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவால் ஏற்படும் எத்தகைய நெருக்கடிகளையும் எதிர்கொள்ள சிறப்பாக தயாராகும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நோய்த்தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

அதன்படி இந்த பிரமாண்ட மருத்துவ ஒத்திகை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தொடங்கியது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா சப்தர்ஜங் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். ஜம்முவில் உள்ள காந்தி நகர் மருத்துவமனையில் கொரோனா மேலாண்மை தயார்நிலையை உறுதி செய்வதற்கான ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் கோவிட் தயார்நிலையை சரிபார்க்க மாஸ் டிரில் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!