ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்(75) வெற்றி பெற்றார். கடந்த 10ம் தேதி அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து அவர் டில்லி சென்று கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பியதும் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரல் தொற்றும் ஏற்பட்டது. உடனடியாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்றைய மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அவருக்கு கொரோனாவுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் இளங்கோவன் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.