அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியது.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டார். நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும் – ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ம் ஆண்டு வரை நீடிக்கிறது. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும்; அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய தீர்மானத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது ஓ.பன்னீர் செல்வம் நீக்கம் தன்னிச்சையானது, நியாயமற்றது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார். ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது.
எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்த காரணமும் கூறாமல் கட்சியில் இருந்து அவரை நீக்கியுள்ளனர், இது தன்னிச்சையானது, நியாயமற்றது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த நிலையில் அந்த பதவிக்கு போட்டியிட விதிகள் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக நினைத்ததை எல்லாம் செய்து விட முடியாது. பொதுச்செயலாளர் பதவியை மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு எந்த புள்ளிவிவரமும் இல்லை. ஜூலை 11ம் தேதி பொதுக்குழு தீர்மானத்திற்கு தடை விதிக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர எந்த கருத்து கணிப்பும் நடத்தவில்லை. இரட்டை தலைமை காலாவதியாகிவிட்டதாக கூறிவிட்டு, அவர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுக்குப உறுப்பினர்களை மட்டும் ஏற்றுக்கொள்ணடு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் வாதத்தை முன்வைத்தார். தொடர்ந்து விவாதம் நடக்கிறது.