புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, புதிய ரகங்களை பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா கூறியதாவது:
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30% சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்புத்தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன்கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை
கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை முக்கனி விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024க்கு ரூ.96.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பொதுமக்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் .ஜெ.நாகராஜன், புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் .பி.பாண்டியன், வட்டாட்சியர் .பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.