Skip to content

ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

  • by Authour
கோவை, சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் – பல்லடம், வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை, வேட்டி உள்ளிட்ட ரகங்கள் சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து சப்ளை செய்த துணிகளுக்கு தகுந்தவாறு அரசு சார்பில் ஊக்கத்தொகை மற்றும் மானியம் வழங்கப்படும். வதம்பச்சேரி கூட்டுறவு சங்கத்தில் மேலாளராக சவுண்டப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த சங்கத்தில் 700 க்கும் மேலான நெசவாளர்கள் உறுப்பினர்கள் உள்ளனர். மேலாளர் சவுண்டப்பன் அரசிடம் இருந்து நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்க தொகையை பெற்று கோவை, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த நெசவாளர்களுக்கு வழங்குவதற்காக லஞ்சம் கேட்டு உள்ளார். இதன்படி கைத்தறி நெசவாளர்கள் தங்களுக்கு அரசின் ஊக்கத்தொகை கிடைக்க வேண்டும் என்பதற்காக கூட்டுறவு சங்க மேலாளர் சவுண்டப்பனியிடம் லஞ்சப் பணம் கொடுத்து உள்ளனர். பலரிடம் இருந்து மொத்தம் ரூபாய் 15 லட்சத்து 89 ஆயிரத்து 950 வசூலானது. அந்தத் தொகையை மேலாளர் சவுண்டப்பன் தனது அலுவலக மேஜையில் வைத்து உள்ளார். இந்நிலையில் நெசவாளர்களிடம் இருந்து லஞ்சப் பணம் வசூலித்தது தொடர்பாக கோவையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறை துணை கண்காணிப்பாளர் திவ்யாவுக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை 4 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கூடுதல் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் வதம்பச்சேரி கூட்டுறவு சங்க அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்பொழுது சவுண்டப்பன் அலுவலகத்தில் இருந்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சவுண்டப்பனை பிடித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் மீது கணக்கில் வராத லஞ்சப் பணத்தை வைத்து இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. லஞ்சப் பணத்துடன் கூட்டுறவு சங்க மேலாளர் பிடிபட்டு இருப்பது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
error: Content is protected !!