71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, திருச்சி மாவட்ட அளவிலான விழாவாக, திருச்சி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கி தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:
மறைந்த முதல்வர் கருணாநிதி காலத்தில்தான் கூட்டுறவுத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றது., 26 ஆயிரம் நியாய விலைக் கடைகளில் 4 ஆயிரம் கடைகள் மட்டும்தான் சொந்தக் கட்டடத்தில் இயங்கின. இதனையறிந்து உள்ளாட்சித்துறை மூலம் ஒரே ஆண்டில் 12 ஆயிரம் புதிய நியாய விலைக் கட்டடங்களை கட்டித் தந்தவர் கருணாநிதி.
இப்போது, எம்எல்ஏ, எம்பி தொகுதி நிதியில் நியாய விலைக் கடை கட்டடங்கள் கட்டப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் 1,254 நியாய விலைக் கடைகள் மூலம் 8 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். சொந்தக் கட்டடம் இல்லாத நியாய விலைக் கடைகளில் 67 கடைகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. மேலும், 133 கடைகளுக்கு சொந்தக் கட்டடம் இல்லை. அந்தக் கடைகளுக்கு புதிய கட்டடம் கட்ட திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9 தொகுதிகளின் சட்டப் பேரவை உறுப்பினர்கள், திருச்சி மக்களவை உறுப்பினர் ஆகியோர் தங்களது தொகுதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கித்தர வேண்டும்.
விவசாயிகள் பெறும் கடனுக்கான வட்டியும் படிப்படியாக குறைத்தவர் கருணாநிதி. திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ.600 கோடி கடன் வட்டியில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. உரங்கள் மற்றும் வேளாண் இடுபொருள்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. வேளாண் உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. எந்தத் துறையாக இருந்தாலும் அதில் கூட்டுறவு அமைப்பு இல்லாமல் இல்லை. பணியாளர் கூட்டுறவு சங்கம் மூலமாக கூட்டுறவுத்துறை அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
கூட்டுறவு சங்கம் மட்டும்தான் கடன் பெறும் நபர் திரும்ப செலுத்தும் தகுதியை அறிந்து ஆவணங்கள் இல்லாமல் கடன் வழங்குகின்றன. நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் என்றால், அந்த விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பது கூட்டுறவுத்துறை மட்டுமே.
இத்தகைய சிறப்பு மிக்க கூட்டுறவு அமைப்புகளுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் எப்படி தேர்தல் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அரசு விழாவில் அரசியல் பேச வேண்டாம் என விரும்புகிறேன். கூட்டுறவு அமைப்புகளில் போலியான உறுப்பினர்களை கண்டறிந்து, அவர்களை நீக்கம் செய்து, உண்மையான உறுப்பினர்களை கொண்டு கூட்டுறவு தேர்தலை நடத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. விரைவில் கூட்டுறவு தேர்தலுக்கான தேதியை முதல்வரே அறிவிப்பார் .
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்
இந்த விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தி. ஜெயராமன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் தா. அரசு, கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் பா.செந்தில்குமார், திருச்சி எம்பி துரை வைகோ, மேயர் மு. அன்பழகன் ,எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், சவுந்தரபாண்டியன்,பழனியாண்டி, ஸ்டாலின் குமார்,கதிரவன்,நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் வைரமணி, ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.