செங்கல்பட்டு நகர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அருகே ஜாய்லேண்ட் என்ற அசைவ ஓட்டல் இயங்கி வருகிறது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த ஓட்டலில் செங்கல்பட்டு மேலமையூர் ராமகிருஷ்ணா நகரில் வசித்து வரும் ரகுராம் என்பவரது மகனும் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் கீர்த்திவாசன் (24) என்பவர் அவரது நண்பர்களோடு உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். நண்பர்களோடு கீர்த்திவாசனும் சாப்பாடு சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட பிறகு கீர்த்திவாசன் மட்டும் அதே ஓட்டலில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். அந்த குளிர்பானத்தை குடிக்கும்போதே ஏதோ துர்நாற்றம் வீசுவது போல் உணர்ந்த கீர்த்திவாசன் அந்த குளிர்பானத்தில் அடிப்பகுதியில் ஏதோ கழிவுகள் தூள்தூளாகவும் தென்பட்டுள்ளது.
குளிர் பானத்தில் மிதக்கும் கழிவுகளை பார்த்ததும் கீர்த்திவாசனுக்கு வாந்தி வருவது போலவும், தலை சுற்றுவது போலவும் தோன்றியுள்ளது. இதுகுறித்து ஓட்டல் நிர்வாகியிடம் கேட்டுள்ளார். அதற்கு உரிமையாளரின் மகன் பாட்டிலுக்குள்ளே இருப்பதெல்லாம் எங்களுக்கு எப்படி தெரியும்?, நீங்கள் குளிர்பானம் தயாரிக்கும் கம்பெனியில்தான் கேட்க வேண்டும் என அலட்சியமாக முறையற்ற பதிலை கூறியுள்ளார்.
உடனடியாக கீர்த்திவாசனை அவரது நண்பர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை சோதித்த மருத்துவர்கள் கீர்த்திவாசனுக்கு ஃபுட் பாய்சனாகியுள்ளது. அவரை கண்காணிப்பில் வைக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதாவிடம் புகார் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் கீர்த்திவாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.