பிரபஞ்ச அழகி போட்டி வரும் 14ம் தேதி நடக்கிறது. இந்தியாவின் சார்பில் திவிதா ராய் கலந்து கொள்கிறார். மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் சுற்றுகளில் ஒன்றான தேசிய ஆடை போட்டியில் போட்டியாளர்கள் தங்கள் நாட்டின் கலாச்சாரத்தை ஆக்கப்பூர்வமான முறையில் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வருவர். அந்த வகையில் இந்தியா சார்பில் திவிதா ராய், இறக்கைகளுடன் கூடிய அற்புதமான தங்க நிற லெஹங்கா அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரது உடை வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் செல்வத்தின் சின்னமாக விளங்கும் இந்தியாவை தங்கப் பறவையாக சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தகைய அழகான ஆடையை வடிவமைத்த அபிஷேக் ஷர்மா பேசுகையில், தேசிய உடையை வடிவமைக்கும் போது, நம் நாட்டின் முழு வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் காட்ட விரும்பினேன் என்றார். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயதான அன்னா சுயங்கம் என்ற நடிகை, 2022ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியின்போது அவர், குப்பையில் வீசப்பட்ட குளிர்பான மூடிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தார். மேடையில் வித்தியாசமான உடையை அணிந்துவந்ததால் பலரின் கவனத்தை அன்னா ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து அந்த உடை அணிந்து வந்ததற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். அந்த காரணம் பலரை நெகிழ்ச்சியடையச் செய்தது. அவர் மேடையில் இருந்த புகைப்படங்களைப் பகிர்ந்து அவர் பதிவிட்டுள்ளதாவது, குப்பை சேகரிக்கும் தந்தைக்கும், தெருவை சுத்தம் செய்யும் தாயிக்கும் மகளாக பிறந்தவள் நான். குப்பை என் வாழ்வில் புதிதல்ல, குப்பைகளுடனும், மறுசுழற்சி செய்யும் பொருள்களுடனும் வாழ்ந்தவள் நான். சிறுவயது முதலே என்னைச் சுற்றியிருந்த பொருள்களைக் கொண்டு செய்த உடையை நான் அணிந்து வந்துள்ளேன். பலரால் மதிப்பிழந்ததாக கருதப்பட்டு தூக்கியெறியப்பட்ட பொருள்கள் உண்மையிலேயே தன்னுடைய மதிப்பையும் அழகையும் இப்போது எனக்குள் இருந்து காட்டுகின்றன. அந்த உடையின் அழகைப் பார்த்தவர்களுக்கும், என் பேச்சைக் கேட்டவர்களுக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.