பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியாகியிருக்கும் எல்2: எம்புரான் திரைப்படத்தின் பல பகுதிகளை தாங்களாகவே நீக்கப்போவதாக திரைப்படக் குழு அறிவித்திருக்கிறது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் மலையாள திரைப்படம் எல்2: எம்புரான். இந்தப் படத்தின் சில காட்சிகள் ஒரு தரப்பினரின் மனதைப் புண்படுத்துவதாக இருப்பதால், அதனை நீக்கப்போவதாக படக்குழு அறிவித்திருக்கிறது. எல்2: எம்புரான் என்ற இந்தப் படத்தை 2020லேயே வெளியிட முடிவு செய்திருந்தாலும் கோவிட் உள்ளிட்ட காரணங்களால் படத்தின் தயாரிப்பு தள்ளிச் சென்றது. இதற்குப் பிறகு 2023 அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கி, 2024 டிசம்பரில் முடிவுக்கு வந்தது. படப்பிடிப்பிற்குப் பிந்தைய பணிகள் முடிவடைந்து, இந்த ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டாலும், லூசிஃபர் படத்தை பார்க்காமலேயே தனியாகவும் பார்க்கக்கூடிய வகையில்தான் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. எம்புரானில் முதல்வராக இருக்கும் டொவினோ தாமஸ், பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கி விசாரணைக்கு ஆளாகிறார். இதனால், ஐ.யு.எஃபை உடைத்து ஐ.யு.எஃப் (பிகேஆர்) என்ற புதிய கட்சியை உருவாக்குகிறார். அகண்ட சக்தி மோர்ச்சா என்ற ஒரு தேசியக் கட்சியோடு இணைகிறார். அந்தக் கட்சியின் தலைவர் பால்ராஜ் என்ற பாபா பஜ்ரங்கி. பல ஆண்டுகளுக்கு முன்பாக மதக் கலவரத்தில் ஈடுபட்டு பலரைக் கொலைசெய்தவர். இதற்கிடையில் இந்திரஜித் சுகுமாரன், மோகன்லாலைக் கண்டுபிடித்து கேரளாவின் நிலைமையைச் சொல்கிறார். திரும்பிவரும் மோகன்லால், ஐயுஎஃபின் தலைவராக மஞ்சு வாரியாரை நிறுத்தி, அவரை முதல்வராக்க முயல்கிறார். இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
இந்த கதைக்கு வலதுசாரிகள், குறிப்பாக ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குஜராத் கலவரத்தை நினைவுபடுத்துவது போல காட்சிகள் இருப்பதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர். வலதுசாரி அமைப்புகள் கண்டனங்கள் எழுப்பியதைத் தொடர்ந்து படத்தில் 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே படத்தின் இயக்குனர் பிருதிவிராஜை விமர்சித்து பாஜக அமைப்பான ”பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா’ மாநில பொதுச் செயலாளரான கணேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில், “நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜின் வெளிநாட்டு தொடர்புகள் பற்றி விசாரிக்க வேண்டும். ஆடு ஜீவிதம் படத்திற்கு பின், அவருடைய திரைப்படங்கள் தேசவிரோத கருத்துகளையே பரப்பி வருகின்றன. எம்புரான் உள்பட அவர் நடித்த ‘குருதி’ முதல் ‘ஜன கன மன’ படம் வரை தொடர்ந்து பயங்கரவாத சித்தாந்தங்களை நியாயப்படுத்தும் படங்களாகவே இருந்துள்ளன.ஆடுஜீவிதம் படப்பிடிப்பின்போது அவர் ஜோர்டன் நாட்டில் சிக்கிக் கொண்டார். அப்போது, அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் இந்த படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.