மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர், மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா, தொண்டர்களிடையே பேசியது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்……மோடி தேர்தலுக்கு முடிவுகட்டுவார். மதம், ஜாதி, மொழி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துவார். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என்றால் மோடியை கொல்ல தயாராக இருக்கவேண்டும். அவரை தோற்கடிக்கும் பொருளில் கொல்லுங்கள் என அதில் பேசி உள்ளார். மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா, படேரியாவின் வீடியோ கிளிப்பை பகிர்ந்ததுடன், பிரதமரைக் கொல்ல சதி நடக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிககை வைத்தது குறிப்பிடத்தக்கது. கடும் சர்ச்சை எழுந்த நிலையில், படேரியா ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க செய்யுங்கள் என்ற அர்த்தத்தில் தான் பேசியதாகவும், தனது கருத்துகள் தவறாக விளக்கப்பட்டதாகவும் கூறி உள்ளார்.