தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கிராமபுறங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள் கிடைத்திட வேண்டும் என்ற வகையில் மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மேலும், கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் செந்துறை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.
அதன்படி செந்துறை ஒன்றியம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் தரைதளம் (1695.50 ச.மீ), முதல்தளம் (1695.50 ச.மீ) மற்றும் இரண்டாவது தளம் (1000.41 ச.மீ) மற்றும் சாய்வு தளம் (418.30 ச.மீ) என மூன்று தளங்களுடன் 4809.71 சதுர மீட்டரில் 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு அவசர சிசிக்சை பிரிவு (கிரிட்டிகல் கேர் செண்டர்) கட்டும் பணிகளை துவக்கி வைத்தார். மேலும் இந்த சிறப்பு சிகிச்சை பிரிவு பாம்பு கடி, நாய்கடி, விபத்து காயங்களுக்கான முதலுதவி உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின்கீழ் நல்லாம்பாளையம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ.8.13 லட்சம் மதிப்பீட்டிலும், பின்னர் உஞ்சினி ஊராட்சியில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ் முதலியார் தெருவில் ரூ.8.36 லட்சம் மதிப்பீட்டிலும், இதேபோன்று உஞ்சினி ஊராட்சி காலனித் தெருவில் ரூ.8.17 லட்சம் மதிப்பீட்டிலும் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
பின்னர், கீழமாளிகை ஊராட்சி ராசாபாளையம் கிராமத்தில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ் 8.64 லட்சம் மதிப்பீட்டிலும், தொடர்ந்து குமிழியம் ஊராட்சி, தெற்கு தெருவில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ் ரூ.8.30 லட்சம் மதிப்பீட்டிலும், குமிழியம் காலனி தெருவில் ரூ.8.30 லட்சம் மதிப்பீட்டிலும், பின்னர் பரணம் ஊராட்சி, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ் ரூ.9.85 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் என நல்லாம்பாளையம், உஞ்சினி, இராசபாளையம், குமிழியம் மற்றும் பரணம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மொத்தம் ரூ.59.75 லட்சம் மதிப்பீட்டிலான ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளையும் துவக்கி வைத்து, பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக குமிழியம் அல்லூர்பட்டி தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.7.35 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதன் மூலம் அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் 20 கோடியே 67 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) (பொ) தேவன், உதவி செயற்பொறியாளர் தனவேல், உடையார்பாளையம் கோட்டாட்சியர் (பொ) ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர் உசைன், மருத்துவ அலுவலர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.