சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிறையாத ஒரு சிறுமியும், இந்திரா நகரைச் சேர்ந்த இவரது உறவினரான ஒரு வாலிபரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இது பெற்றோருக்கு தெரியவந்ததால் மகளின் கருவை கலைக்க ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். வாழப்பாடியிலுள்ள மருத்துவர் செல்வாம்பாள் என்பவரது தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர் செல்வாம்பாள், 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்துள்ளதால், கருவை கலைக்க முடியாது என்பதால், பிரசவ முறையில் சிகிச்சை அளித்து, சிறுமியின் வயிற்றில் இருந்த குறை மாத குழந்தையை பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் அவசர சிகிச்சை வாகனத்தில் வைத்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை செய்தனர். திருமணமாகாத சிறுமிக்கு பிரசவ சிகிச்சை அளித்த பெண் டாக்டர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி, வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.
இவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் குறை மாதத்தில் சிறுமியால் பிரசவிக்கப்பட்டு, தனியார் ஆஸ்பத்திரியில் நெகிழித் தொட்டியில் உயிருடன் கிடந்த பெண் குழந்தை மீட்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு இன்குபேட்டர் கருவியில் வைத்து சிகிச்சை அளித்து, குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு, பிரசவம் பார்த்த பெண் மருத்துவர் மீதும், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபர் மீது போக்சோ கீழும் நடவடிக்கை எடுக்க வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர், தனலட்சுமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.