பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகத்தில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றிய தலைமையில் அக்கட்சியின் தேர்தல் பிரசாரம் நேற்று தொடங்கியது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா பிரசாரத்தின்போது காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை பிரியங்கா அறிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் மாதம்தோறும் ஒரு ஊழல் வெளிப்பட்டு வருகிறது. இதுவரை பாஜக 220 மாதங்கள் ஆட்சியில் இருந்துள்ளது. 225 ஊழல்கள் வெளிப்பட்டுள்ளன. வியாபம் ஊழல், ரேஷன் விநியோகத்தில் ஊழல், நிலக்கரி சுரங்க ஏலத்தில் ஊழல், கொரோனா காலகட்ட மருத்துவ சேவையின்போது ஊழல் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
கடவுள் விஷயத்தில் கூட முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஊழலில் ஈடுபட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும், மாதம்தோறும் வீட்டுப் பயன்பாட்டுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.