பஞ்சாபில் நடந்த பல்கலைகளுக்கு இடையிலான கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே நடைபெற்ற கபாடி போட்டியின் போது ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதைக் கண்டித்து கேள்வி எழுப்பிய தமிழக கபாடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். மேலும் தமிழ்நாட்டின் கபாடி பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது. மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, நம் மாநில விளையாட்டு வீரர்களை பாதுகாக்க வேண்டுமெனவும், பஞ்சாபில் இருந்து அவர்களை பத்திரமாக அழைத்து வரவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டார்.