கர்நாடகத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் 115 இடங்களில் முன்னணியில் உள்ளது. இதே நிலை நீடித்தால் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி. அதே நேரத்தில் பாஜகவுக்கு 76 இடங்களே கிடைக்கும் நிலையில் உள்ளதால், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரையும் பெங்களூரு அழைத்து வர காங்கிரஸ் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக புறநகர் பகுதியில் வெற்றிபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரு அழைத்து வர 12 ஹெலிகாப்டர்களை காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. பெங்களூரு அழைத்துவரப்படும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அங்குள்ள ஹில்டன், ஹயாத் ஆகிய ஓட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள். இதையொட்டி அந்த இரு ஓட்டல்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜகவினர், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கடத்தி செல்லும் நடவடிக்கைகளை தடுக்க இந்த ஏற்பாடுகளை காங்கிரஸ் செய்துள்ளது. நாளை மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஹில்டன் ஓட்டலில் நடக்கிறது. இந்த கூட்டத்திலேயே முதல்வர் தேர்வு நடைபெறலாம் என தெரிகிறது.
இதற்கிடையே இன்று பெங்களூருவில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இன்று பிற்பகல் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாலையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் கார்கே மற்றும் சிவக்குமார், மேலிட பார்வையாளர்கள் பங்கேற்கிறார்கள். முதல்வர் தேர்வு குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது.