நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசி்ங் மரணம் தொடர்பாக தென்மண்டல ஐஜி கண்ணன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஐஜி கூறியதாவது:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் கடந்த 2ம் தேதி மாயமானார். அவரது குடும்பத்தினர் 3ம் தேதி உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் ஆள் மாயம் என வழக்குப்பதிந்து தேடினர். 4ம் தேதி திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரிலுள்ள அவரது வீட்டருகே தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் உடல் பாதியளவு தீயில் கருகி கண்டெடுக்கப்பட்டது.
15 முதல் 50 சென்டி மீட்டர் அளவு கொண்ட கடப்பா கல் கம்பியுடன் சுற்றி அவரது உடலுடன் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. அவரது வாயில் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்கிரப்பர் திணிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் மாயமான வழக்கு சந்தேக மரணம் என மாற்றப்பட்டது. அவரது வீட்டு வளாகத்தில நிறுத்தியிருந்த காரில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். தொடர்ந்து அவரது அலுவலகத்தில் நடத்திய சோதனையில் மரண வாக்குமூலம் என அவர் நெல்லை மாவட்ட எஸ்பிக்கு எழுதிய கடிதங்கள் சிக்கியது. இதில் தனக்கு பணம் வரவு, செலவு தொடர்பாகவும், அரசியல் ரீதியாகவும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதற்காக குடும்பத்தினர், உறவினர்கள் யாரும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எழுதப்பட்டிருந்தது.
தேவைப்பட்டால் அவர்களிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்துவோம்.. இதில் துப்பு துலக்குவதற்காக 10 தனிப்படை அமைக்கப்பட்டது. ஒவ்வொரு தனிப்படையினரும் ஒவ்வொரு டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட முடிவுகள் மட்டுமே வந்துள்ளது. அதில் அவரது உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை. கொலையா, தற்கொலையா என அறிக்கையில் கூறப்படவில்லை. இறுதி கட்ட பிரேத பரிசோதனை, தடயவியல் உட்பட பல்வேறு அறிக்கைகளின் வந்த பின்னரே இவ்வழக்கில் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியும்.
ஜெயக்குமார் சடலம் கிடந்த இடத்திலிருந்து இரு நாட்களுக்கு முன்னர் தீயில் கருகிய டார்ச் லைட் மற்றும் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பழைய கத்தி ஆகியவை தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த வழக்கிற்கும் இந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. எந்த ஒரு வழக்கிலும் விசாரிப்பதற்கு 10 தனிப்படை அமைக்கப்பட்டது கிடையாது. ஜெயக்குமார் வழக்கில் தனிப்படை போலீசாரின் விசாரணை சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவ்வழக்கில் மர்ம முடிச்சுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் அவிழும், முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.
‘‘அவர் உயிரிழந்து மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு பிறகு உடல் எரியூட்டப்பட்டதாக உடற்கூறு பரிசோதனை தகவல்கள் கூறுகின்றன. உடல் கிடந்த தோட்டத்திலிருந்து கடல் பகுதி மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது போன்ற நீர் நிலைகளில் உடலை போட்டு விடலாம் என்ற அடிப்படையில் கம்பி சுற்றப்பட்டு கடப்பா கல், இரும்பு தகடுகள் கட்டப்பட்டிருப்பதாக காவல்துறை தடய ஆய்வில் தெரியவந்துள்ளது’’ என்றார்.