2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு 52 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்று,2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று மகாராஷ்ட்ராவில் ஒரு சுயேச்சை எம்.பி. காங்கிரசில் சேர்ந்தார். இதனால் காங்கிரஸ் எம்.பிக்கள் எண்ணிக்கை 100 ஆனது. 10 ஆண்டுகளுக்கு பிறகு, மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் பெறுகிறது. எதிர்க்கட்சித்தலைவராக ராகுல் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை, இது வெற்றி இல்லை என்றாலும், நல்ல முன்னேற்றமாக கருதப்படுகிறது. உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை தோற்கடித்து, அத்தொகுதியை காங்கிரஸ் மீட்டுள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியோடு, ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற தோழமை கட்சிகளும் பல மாநிலங்களில் வெற்றி கண்டுள்ளன. இதனால், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவான எண்ணிக்கையில் மக்களவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. இது காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களுக்கும் உற்சாகம் அளித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஆராயவும், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) காலை11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்துக்கு கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்குகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா உட்பட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித்தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது.