அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடிப்பள்ளத்தெருவில் இதயத்துல்லா(48) என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பக்ருதீன்(22) என்பவர் இதயத்துல்லாவின் மகளை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை இதயத்துல்லா குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர். இதனால் பக்ருதீன் இதயத்துல்லா குடும்பத்தினருடன் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 02.12.2022 அன்று காலை 02:45 பக்ருதீன் இதயத்துல்லா அவரின் வீட்டிற்கு சென்று அவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 2 டூவீலர்களை பெட்ரோல் ஊற்றி எரித்தார்.மேலும் இதயத்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி , இதயத்துல்லாவை கத்தியால் குத்தி கொலை செய்த முயற்சித்துள்ளார். இது குறித்து இதயத்துல்லா போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிசெய்து பக்ருதீனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பக்ருதீன் மீது மீன்சுருட்டி மற்றும் உடையார்பாளைய போலீஸ் ஸ்டேசனில் 14 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் பக்ருதீன் வெளியே வந்தால் பல்வேறு சமுதாய கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவார் என்பதால் பக்ருதீனை குண்டாசின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று ஜெயங்கொண்டம் நகர காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இராஜா சோமசுந்தரம் பரிந்துரை செய்தனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா மேல்பரிந்துரையை ஏற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணை பிரதிகள் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.