வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் இரவில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இரவில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை குற்றாலம், சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நொய்யல் ஆறு வழிகளில் உள்ள பாலங்கள் தடுப்பணைகளில் மழை நீர் ஆர்ப்பறித்து ஓடுகிறது. புட்டு விக்கி பாலம், ஆத்துபாலம் பகுதியில் சுண்ணாம்பு
கால்வாய், பேரூர் நதிக்கரை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. பேரூர் பகுதியில் ஆர்பரித்து ஓடும் மழை நீரில் கரையோரம் உள்ள செடி கொடிகள் நீரில் அடித்து செல்ல பட்டன. இதனிடையே நரசிபுரம் பகுதியில் காலி கண்டெய்னர் ஒன்று எங்கிருந்தோ வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னமநல்லூர் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை நீர் கரைபுரண்டு ஓடுவதை முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார். கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.