மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 80ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் மாவட்டத்தில் தற்போது வரை 37 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பயிறு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் மாவட்ட முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தது. மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் உளுந்து, பயிறு தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில்
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை அருகே கரையை கடந்து உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை குறையும் என வானிலை மையம் தெரிவித்தது. இதை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை இல்லாத நிலையில் இரவு சாரல் மழையாக இரண்டு மணி நேரம் தொடர்ந்து பெய்தது. இந்த மழையினால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தும், பயிறு, உளுந்து பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ள நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்தது விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.