Skip to content
Home » தொடர் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் டாக்டரை அணுகவும்….. கோவை ஜிஎச் முதல்வர் அறிவுரை…

தொடர் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் டாக்டரை அணுகவும்….. கோவை ஜிஎச் முதல்வர் அறிவுரை…

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா பருவ மழை காரணமாக வரும் காய்ச்சல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தற்போது பருவ மழையால் காய்ச்சல் வருகிறது எனவும் அதே சமயம் கோவை அரசு மருத்துவமனையில் அதிகமான காய்ச்சல் நோயாளிகள் வருவதாக கூற முடியவில்லை எனவும் தெரிவித்தார். எப்போதும் வருவதை விட ஒன்று இரண்டு சதவிகிதம் வேண்டுமானால் அதிகமாக வரலாம் என தெரிவித்த அவர் இந்த பருவ காலத்தில் காய்ச்சல் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு எனவும் அதனை கருத்தில் கொண்டு தனி வார்டு ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் இது போன்ற சமயங்களில் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என மருத்துவர் அவர்களுக்கும் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் கூறினார். மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் குழந்தைகளை பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். தண்ணீர், பாக்டீரியா, வைரஸ் உட்பட பிற காரணங்களாலும் காய்ச்சல் வரலாம், முதலில் அது எந்த வகை காய்ச்சல் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். சாதாரணமாக காய்ச்சல் என்று வந்தால் இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிட வேண்டும் என்றார்.எதிர்ப்பு சக்தியால் வரும் காய்ச்சல் என்றால் பயப்படத் தேவையில்லை என கூறிய அவர், கிருமிகளால் காய்ச்சல் ஏதேனும் வந்தால் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்தார். குறிப்பாக நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். காய்ச்சல் வந்தால் கஞ்சி, இளநீர், மோர் போன்ற நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும் எனவும் முக கவசங்கள் அணிந்து கொள்வதும் நல்லது தான் என்றார்.

டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை கோவை அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், எனவும் அவர்களும் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார். காய்ச்சலை பொறுத்தவரை சாதாரணமாக 60 பேர் புற நோயாளிகளாக வருகின்றனர். அவர்களை கண்காணிக்க மருத்துவர்களும் உள்ளனர் தேவைப்பட்டால் கூடுதல் மருத்துவர்களை போடலாம் என்றார். மக்கள் மழை நீர் தேங்காமல் இருக்க அரசு அறிவுறுத்தியதை மேற்கொள்ள வேண்டும் கொசுக்களில் இருந்து பாதுகாத்து கொள்ள கொசு வலைகளை பயன்படுத்தலாம் என்றார். மேலும் மக்கள் எப்போதும் நீரை கொதிக்க வைத்து பருகுங்கள் எனவும் மழையில் அதிகமாக வெளியில் செல்வதை தவிருங்கள் எனவும் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *