Skip to content
Home » தொடர்ந்து 5 ஏ.டி.எம்-களில் நூதன திருட்டு… கோவையில் கைவரிசை காட்டி வரும் ஏடிஎம் கொள்ளையர்கள்…

தொடர்ந்து 5 ஏ.டி.எம்-களில் நூதன திருட்டு… கோவையில் கைவரிசை காட்டி வரும் ஏடிஎம் கொள்ளையர்கள்…

கோவை, குனியமுத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏ.டி.எம் மையத்தில் நூதன முறையில் பணம் திருட்டு நடைபெற்றது. அதில் ஏ.டி.எம் மைய எந்திரத்தின் பணம் வெளியே வரும் இடத்தில் மர்ம நபர்கள் டேப் ஒட்டி இருந்தனர். இதனால் வாடிக்கையாளர்கள் தனது ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் போது எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வராது. அதே நேரத்தில் அந்த பணம் மீண்டும் எந்திரத்துக்குள் செல்லாமல் இடையில் சிக்கிக் கொள்ளும், வாடிக்கையாளர்கள் பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் வெளியே சென்ற பிறகு, மறைந்து இருந்து நோட்டமிடும் அந்த நபர்கள் உடனடியாக ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்து தாங்கள் ஒட்டிய டேப்பை அகற்றுவர். டேப் அகற்றப்பட்டதும், எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும். இந்த பணத்தை எடுத்துக் கொண்டு அங்கு இருந்த அந்த நபர்கள் சென்று விடுவார்கள். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து பணம் வராத நிலையில் வங்கி கணக்கிற்கு சம்பந்தப்பட்ட பணம் திரும்ப செல்லாததாலும் வங்கிக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். இதை அடுத்து வங்கி அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் களில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர்.

இதில் இரண்டு வாலிபர்கள் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் வெளியே வரும் இடத்தில் டேப் ஒட்டி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை அடுத்து அந்த நபர்களின் புகைப்படங்களை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் இருவரும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் குனியமுத்தூர் மட்டுமின்றி ரத்தினபுரி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு ஏ.டி.எம் களில் இதேபோன்று நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை பிடிக்க மாநகர காவல் துறை சார்பில் தனி படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் கேரளா மாநிலத்தில் ஏ.டி.எம் மையத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பின்னர் நாமக்கல் போலீசார் சுட்டுப் பிடிக்கப்பட்ட அசர் அலி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருகிறார்.

இதனால் கோவையில் நூதன திருட்டில் ஈடுபட்ட வாலிபர்களும் அசர் அலி உள்ளிட்ட வடமாநில கும்பலுக்கும் தொடர்பு இருக்குமா ? என தனிப்படை போலீசார் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதை அடுத்து தனிப்படையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் அங்கு இருந்து அசர் அலியிடம் இந்த வாலிபரின் புகைப்படத்தை காண்பித்து விசாரணை நடத்தினர், ஆனால் அசர் அலி இந்த வாலிபர்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாக தெரிகிறது. மேலும் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் காவல்துறையினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!