Skip to content

திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் சாக்கடை… 3 பேர் பலி?

  • by Authour

திருச்சி, உறையூர், மின்னப்பன் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த லதா ( வயது 60) மருதாம்பாள் ( 85) மற்றும் பிரியங்கா ( 4) ஆகிய 3 பேர் அடுத்தடுத்து இறந்துள்ளனர். அவர்களின் இறப்புக்கு குடிநீரில் சாக்கடை நீர் கலந்தது தான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தில் அதிமுக திருச்சிமாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். சாக்கடை கலந்த குடிநீரை அருந்திய 11 பெண்கள் 8 குழந்தைகள் என 19 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோன்று 10க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  இந்த குற்றச்சாட்டுகள் குறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் அளித்துள்ள விளக்கம்..திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் பகுதியில் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இப்பகுதியில் பிரியங்கா என்ற நான்கரை வயது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால், வண்ணாங்கோவில் பகுதியில் பாரம்பரிய முறையில், வயிற்று தொக்கு நீக்குதல் மற்றும் ஓதல் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்த குழந்தை சுயநினைவின்றி காணப்பட்டதால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். குழந்தைக்கு வயிற்று தொற்று பாதிப்பால், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. தொக்கு நீக்குதல், ஓதல் சிகிச்சை வழங்கப்பட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தை இறப்பு நிகழ்ந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிகிறது. மேலும், இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற திருவிழாக்களில் அதிகமான மக்கள் கூடியதாலும், அன்னதான நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட உணவுகளாலும் ஒவ்வாமை ஏற்பட்டு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம், என சந்தேகிக்கப்படுகிறது எனவே, இப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, தற்காலிகமாக மாநகராட்சி வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா? மாநகராட்சி பணியாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஆறு இடங்களில் குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்பகுதி முழுவதும், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது, என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!