டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை திமுக குழு சந்தித்த பின்னர், டிஆர் பாலு எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: சட்டமன்றத்தில் படிக்க வேண்டிய கவர்னர் உரைக்கு ரவி ஒப்புதல் கொடுத்து உள்ளார். அதன் பிறகு தான் அந்த உரை சபையில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. ஒப்புதல் அளித்த உரையை மாற்றி பேசியது பேரவை விதிகளுக்கு முரணானது. ஒப்புதல் அளித்த அந்த உரையில் பலவற்றை தவிர்த்தும், சேர்க்கவும் செய்துள்ளார். இதுபற்றி விளக்கமாக குடியரசு தலைவரிடம் எடுத்து உரைத்தோம். கவர்னருக்கு எதிரான மனு அடங்கிய கடிதத்தை முதல்வர் கொடுத்தார். சீலிட்ட அந்த கடிதத்தையும் ஜனாதிபதியிடம் கொடுத்தோம். திமுக குழு எடுத்துரைத்த விஷயங்களை குடியரசு தலைவர் கவனமாக கேட்டறிந்தார். குடியரசு தலைவரை சந்தித்துவிட்டதால் அமித்ஷாவை சந்திப்பதற்கான அவசியம் இல்லை. குடியரசு தலைவரை சந்திக்க அனுமதி கிடைக்காவிட்டால் அமித்ஷாவை சந்திக்கலாம் என நினைத்தோம். இப்போது அதற்கு அவசியம் இல்லை.
கவர்னர் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் கொள்கையை புகுத்த நினைக்கிறார். சனாதன கொள்கையை திணிக்க ரவி முயற்சிக்கிறார். நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னையை திமுக எழுப்பும்.
இவ்வாறு அவர் கூறினார்.