Skip to content
Home » டிவி காமெடி ஷோ முதல் ஆன்மிக சொற்பொழிவாளர் வரை….. மகா விஷ்ணுவை வழிநடத்தியது யார்?

டிவி காமெடி ஷோ முதல் ஆன்மிக சொற்பொழிவாளர் வரை….. மகா விஷ்ணுவை வழிநடத்தியது யார்?

  • by Senthil

 சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 28ம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு பரம்பொருள் பவுன்டேசனை சேர்ந்த சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது, ‘மாற்றுத்திறனாளிகள் கண் இல்லாமல், கால் இல்லாமல் பிறக்கிறார்கள். அவ்வாறு பிறப்பதற்கு காரணம், அவர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியம்தான் காரணம் என்றும், கடவுள் அனைவருக்கும் சமமானவர் என்றால் அவ்வாறு ஏன் வேறுபாட்டுடன் படைக்கிறார் என்று மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியும், மாற்றுத்திறனாளிகள் மனம் புண்படும்படியும் மகாவிஷ்ணு பேசினார். இந்த பேச்சுக்கு அங்கிருந்த பார்வையற்ற ஆசிரியர் சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது விஷ்ணுவுக்கும், ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு கல்வியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்கள், இந்திய மாணவர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் சைதாப்பேட்டை ஜீயர் சந்து பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான விஜயராஜ் (53) என்பவர் கடந்த 6ம்தேதி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், நாங்கள் ஏதோ முன்ஜென்மத்தில் பாவம் செய்தது போலவும், குற்றம் செய்தது போலவும் கேவலமாகப் பார்ப்பார்கள்.

மாணவர்கள் மத்தியில் இப்படி பேசினால் அவர்கள் எப்படி மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை மதிப்பார்கள். எனவே சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

அந்த புகாரின் படி சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் சேட்டு விசாரணை நடத்தி சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் படி 192, 196(1)(ஏ), 352, 353(2), 92(ஏ) ஆகிய 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். இதனிடையே சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிவந்த போது, நேற்று முன்தினம் விமான நிலையத்திலேயே வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மகாவிஷ்ணுவை சிறையில் அடைப்பதற்கு முன்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தரும் தகவல்களை அவர் போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு விசாரணையின் போது அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த மகாவிஷ்ணு, இளம் வயதிலேயே  பேச்சாற்றல் உள்ளவராக இருந்திருக்கிறார். ஒரு டிவியில் நடந்த காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாண்ட் அப் காமெடி செய்தவர். அதன்பிறக அவர் ஆன்மிக சொற்பொழிவுகளில்  இறங்கி உள்ளார்.

இதனால் கோயில் திருவிழாக்களில் சொற்பொழிவு ஆற்றி வந்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ‘பரம்பொருள்’ என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கினார். தனது சொற்பொழிவுகளை பரம்பொருள் என்ற யூடியூப் சேனல் மூலம் உலக முழுவதும் பரப்பி குறுகிய காலத்தில் பிரபலமாகியுள்ளார். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மகாவிஷ்ணுவின் சொற்பொழிவால் ஈர்க்கப்பட்டு அவருக்கும், அவரது அறக்கட்டளைக்கும் அதிக நிதியை அள்ளித் தந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளிலேயே மகாவிஷ்ணு கோடீஸ்வரராக மாறினார்.

திருவண்ணாமலையை சேர்ந்த பிரபல சாமியார் நித்தியானந்தாவை போல், தானும் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் ‘கடவுளை அடையும் வழி’ போன்ற தலைப்புகளில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மூலம் பேசி தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துள்ளார். மகாவிஷ்ணு அடிக்கடி தியானம் செய்வது வழக்கம். அப்படி தியானம் செய்யும் போது, மகாவிஷ்ணுவிடம் ‘சித்தர்கள்’ பலர் தோன்றி பேசி வந்ததாகவும், சித்தர்கள் அளித்த வரத்தால், 10ம் வகுப்பு வரை படித்திருந்த அவருக்கு பெரிய அளவில் ஞானம் கிடைத்ததாகவும், சித்தர்களே தன்னை வழிநடத்துவதாகவும் மகாவிஷ்ணு தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை ஏன் இழிவாகப் பேசினீர்கள் என்று கேட்டதற்கு, ‘சித்தர்கள்’ கனவில் கூறியதைத்தான் நான் பேசினேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கிலேயே நான் பேசினேன். இதுபோன்று உலகம் முழுவதும் சென்று சொற்பொழிவு நிகழ்த்தி இருக்கிறேன். சைதாப்பேட்டை பள்ளியில் பேசும்போது அங்கு பார்வைற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று மகாவிஷ்ணு கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!