Skip to content
Home » வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி 20 மணி நேரத்துக்கு பின் மீட்பு

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி 20 மணி நேரத்துக்கு பின் மீட்பு

  • by Authour

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், சிவராம்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஹம்சா (20). சித்தகங்கா கல்லுாரியில் பி.டெக்., படிக்கும் இவர், ஹாஸ்டலில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் ஞாயிறு விடுமுறை என்பதால், இவரும், அவரது தோழி கீர்த்தனாவும், மந்தாரகிரி அருகில் உள்ள மைதாள ஏரிக்கு சுற்றுலா சென்றனர். கடும் மழை காரணமாக ஏரியில் இருந்த தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இருவரும் ஏரியின் கரையில் நின்று மொபைல் போனில், ‘ரீல்ஸ்’ செய்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஹம்சா, ‘செல்பி’ எடுத்தபோது தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். பீதியடைந்த தோழி, போலீசாருக்கும், ஹம்சாவின் தந்தை சோம்நாத்துக்கும், மொபைல் போனில் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் ஹம்சாவை தேடத் துவங்கினர். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், மீட்புப் பணிக்கு இடையூறு ஏற்பட்டது. இரவு 8:00 மணி வரை தேடிய மீட்பு படையினர், இருளானதால் பணியை நிறுத்தினர். நேற்று காலை 7:00 மணிக்கு, கிராமத்தினர் உதவியுடன் மீண்டும் தேடும் பணி துவக்கப்பட்டது. ‘ஹம்சா உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. உடலை மீட்கலாம்’ என, நினைத்து தொடர்ந்து தேடினர். ஆச்சரியப்படும் வகையில், 10 முதல் 20 அடி ஆழத்தில் ஒரு பாறை இடுக்கில் சிக்கியிருந்த ஹம்சா, நேற்று மதியம் 12:00 மணியளவில், உயிருடன் மீட்கப்பட்டார். கிட்டத்தட்ட, 20 மணி நேரமாக பாறை இடுக்கில் அவர் சிக்கியிருந்துள்ளார். ஹம்சா கூறுகையில், ”பாறை இடுக்கில் சிக்கியதால். யாராவது வந்து காப்பாற்றுவர் என, நம்பினேன். காலுக்கு கீழே தண்ணீர் பாய்ந்தது. இரவு முழுதும் மண்டியிட்டபடி அமர்ந்து இருந்தேன்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *